உங்கள் கருத்துகள்: 3

திரு. முத்தையா அண்ணாமலை:

 • ”எழில்” மொழியை மேம்படுத்துவதில் உங்களுடைய ஒத்துழைப்புக்கும் உதவிக்கும் மிக்க நன்றி
 • இம்மொழியில் நாங்கள் பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் விரிவான மாற்றுச் சொற்களைத் தந்துள்ளீர்கள். இவை எங்களுக்கும், மற்றவர்களுக்கும் வெகுவாக உதவும்
 • தனிப்பட்டமுறையில், இந்த மாற்றுச் சொற்களில் எனக்கு உடனடியாகப் பிடித்தது “அச்சிடு” (Print) என்பதுதான். அதனை “எழில்” மொழியில் விரைவில் சேர்க்க ஆவன செய்வோம்
 • இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், ‘Return’ என்பதற்குப் பதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள். இவை மொழி அளவில் சரியாக இருப்பினும், நிரலில் அந்தக் கட்டளை பயன்படுகிற விதத்தை வைத்து யோசிக்கும்போது, பொருந்தாது
 • மற்ற பெரும்பாலான மாற்றுச் சொற்களும்கூட, மொழியைச் சற்றே மேம்படுத்தும்விதமாகதான் உள்ளனவேதவிர, பெரிய மாற்றம் எதையும் தந்துவிடவில்லை என கருதுகிறேன்
 • உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து தந்துவாருங்கள். “எழில்” மொழியை மேலும் ஏற்றம் பெறச் செய்வோம். நன்றி!

உங்கள் கருத்துகள்: 2

சென்ற பாகத்தில் “எழில்” மொழியின் முக்கியச் சொற்களைப்பற்றிய மக்களின் வரவேற்பு சதவிகிதத்தைப் பார்த்தோம். இப்போது, அவற்றுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

நாம் ஏற்கெனவே பார்த்தபடி, எல்லாரும் ஒரேமாதிரியான மாற்றுச் சொற்களைத் தரவில்லை. வந்தவற்றுள் சிறப்பாக இருந்த சிலவற்றைமட்டும் இங்கே குறிப்பிடுகிறோம். இவை “எழில்”க்கோ, வருங்காலத்தில் உருவாகக்கூடிய மற்ற தமிழ் நிரல் மொழிகளுக்கோ பயன்படக்கூடும் என்பது எங்கள் எண்ணம்.

முதலில் Print. இதற்கு இப்போது உள்ள சொல் ‘பதிப்பி’. பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரபலமான மாற்றுச் சொற்கள்:

 • அச்சிடு
 • அச்சடி
 • வெளியிடு

அடுத்து, Return, இதற்கு இப்போது உள்ள சொல் ‘பின்கொடு’. பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரபலமான மாற்றுச் சொற்கள்:

 • திருப்பு
 • பதில்கொடு
 • கொடு

மூன்றாவதாக, If / ElseIf / Else. இவற்றுக்கு இப்போது உள்ள சொற்கள், ‘ஆனால்’, ‘இல்லைஆனால்’ மற்றும் ‘இல்லை’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:

 • ஒருவேளை, அல்லது
 • என்றால் / எனில்
 • இருந்தால், இல்லாவிடில், இல்லையென்றால்

நான்காவதாக, For. இதற்கு இப்போது உள்ள சொல் ‘ஆக’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:

 • ஒவ்வொரு
 • இவ்வாறாக
 • முதல்… வரை

ஐந்தாவதாக, Do. இதற்கு இப்போது உள்ள சொல் ‘செய்’. இதற்கு மாற்றாக எந்தக் குறிப்பிடத்தக்க சொல்லும் பரிந்துரைக்கப்படவில்லை.

ஆறாவதாக, While. இதற்கு இப்போது உள்ள சொல் ‘வரை’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:

 • அதுவரை
 • போது
 • அப்பொழுது / அதேவேளை

ஏழாவதாக, Until. இதற்கு இப்போது உள்ள சொல் ‘முடியேனில்’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:

 • அதுவரை / அதுகாறும் / இதுவரை / இதுகாறும்
 • வரை
 • முடியும்வரை
 • மட்டும்

எட்டாவதாக, Function. இதற்கு இப்போது உள்ள சொல் ‘நிரல்பாகம்’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:

 • நிரல்துணுக்கு
 • செயல்பாடு
 • செயல்கொத்து / செயற்கூறு / செயல்நிரல் / பணித்துண்டு
 • வேலை

ஒன்பதாவதாக, End. இதற்கு இப்போது உள்ள சொல் ‘முடி’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:

 • நிறை
 • சுபம்
 • நிறுத்துக

நிறைவாக, Continue, Break, Select, Case, Otherwise. இவற்றுக்கு இப்போது உள்ள சொற்கள், ‘தொடர்’, ‘நிறுத்து’, ‘தேர்ந்தெடு’, ‘தேர்வு’, ‘ஏதேனில்’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:

 • தொடர்க
 • நிறுத்துக / இடைநிறுத்து / தடை செய் / வெட்டு
 • தேர்ந்தெடுக்க
 • தெரிவு
 • இல்லையெனில் / வேறாயின் / மாறாக

இந்த மாற்றுச் சொற்கள் அனைத்தும் சுவாரஸ்யமானவைதான். ஆனால் என்னுடைய தனிப்பட்ட கணிப்பில் இவற்றில் எவையும் உறுதியாக மாற்றியே தீரவேண்டும் என்கிற அளவுக்கு மிக வலுவான(compelling)வையாக இல்லை.

என்னுடைய கருத்து இருக்கட்டும், ”எழில்” மொழியை உருவாக்கியுள்ள திரு. முத்தையா அண்ணாமலைதான் தற்போது புழக்கத்தில் உள்ள “எழில்” சொற்களைத் தேர்வு செய்தவர். அவர் இந்த மாற்றுச் சொற்களைப்பற்றி என்ன நினைக்கிறார்?

(தொடரும்)

உங்கள் கருத்துகள்: 1

எழில் மொழியில் பயன்படும் முக்கியமான சொற்களைப்பற்றிய உங்கள் கருத்துகளைக் கேட்டிருந்தோம். இந்தக் கணக்கெடுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

இந்த வாக்குகளின் அடிப்படையில் பார்க்கிறபோது, சில விஷயங்கள் தெளிவாகப் புரிகின்றன:

 • தற்போதுள்ள “எழில்” மொழிச் சொற்கள் பெரும்பாலும் சரியாகவே அமைந்திருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்
 • நாம் தந்திருந்த பதினாறு சொற்களில், இரண்டைத் தவிர மீதமுள்ள அனைத்தும் பெருவாரியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன, மீதமுள்ள அந்த இரண்டிலும்கூட, ’சரி’க்கும் ‘வேண்டாம்’க்கும் இடையே ஒரு கை விரல்களால் எண்ணும் அளவிலான வாக்கு வித்தியாசம்தான்
 • சில சொற்களுக்கு மாற்றுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எல்லாம் ஒருமித்த கருத்துகளாக அமையவில்லை
 • தமிழ் வார்த்தை வளம் மிகுந்த ஒரு மொழி. இதற்குப் பதில் இன்னொன்று என்று பல சொற்களை நாம் சுட்டிக்காட்டமுடியும். ஆகவே, இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை, இது தவறு, அது சரி என்பதற்கு வலுவான ஒரு காரணம் உள்ளதா என்பதைதான் கவனிக்கவேண்டும்

அதற்குமுன்னால், நாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்த்துவிடலாம். அதன்பிறகு, இதுபற்றி “எழில்” மொழியை உருவாக்கியுள்ள திரு. முத்தையா அண்ணாமலை அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம்.

தரப்பட்ட பதினாறு சொற்களில், மிக அதிக எண்ணிக்கையில் மக்களுடைய ஒப்புதலைப் பெற்ற சொற்கள் இவை:

 • செய் : Do  (96%)
 • தொடர் : Continue (90%)
 • நிறுத்து : Break (90%)
 • தேர்ந்தெடு : Select (90%)
 • தேர்வு : Case (90%)
 • ஏதெனில் : Otherwise (90%)
 • முடி : End (84%)
 • ஆக : For (79%)
 • வரை : While (79%)
 • ஆனால் : If (71%)
 • இல்லைஆனால் : Else If (71%)
 • இல்லை : Else (71%)
 • பதிப்பி : Print (66%)
 • நிரல்பாகம் : Function (60%)
 • பின்கொடு : Return (48%)
 • முடியேனில் : Until (45%)

அடுத்து, ”எழில்” மொழியில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுவரும் இந்தச் சொற்களுக்கு மாற்றாக மக்கள் சொன்ன சுவையான யோசனைகளைத் தொகுத்துப் பார்க்கலாம்.

(தொடரும்)